ஸ்கூட்டியில் வந்த பெண்கள் போதையில் போலீசாரிடம் ரகளை!
சென்னை புழல் பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களிடமும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரிடமும் இளம்பெண்கள் இருவர் போதையில் ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழலை அடுத்த காவாங்கரை சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளம்பெண்கள், கடும் போதையில் மிதமிஞ்சி அநாகரிகமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் திட்டி தீர்த்துள்ளனர்.
போதையில் கூச்சலிட்ட அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற காவல் துறையினரிடமும் அந்தப் பெண்கள் தொடர்ந்து தகாத வார்த்தைகளில் ஆபாசமாகப் பேசி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இரு இளம்பெண்களையும் மீட்டுப் புழல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்கள் மது போதையில் இவ்வாறு நடந்துகொண்டார்களா அல்லது கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் பேசினார்களா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.