மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000 அமலுக்கு வந்தது.. 1.10 கோடி பெண்கள் பயன் - மேற்குவங்கத்தில் பெண்கள் மகிழ்ச்சி!

 

மேற்குவங்க மாநிலத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கும் புதிய நிதியுதவித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுமார் 1 கோடியே 10 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.3,000 நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி முறைப்படி அறிவித்துள்ளார்.

மேற்குவங்க அரசியலில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடந்த 15 ஆண்டுகால மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக அங்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்களுக்கு வழங்கி வந்த 'லக்ஷ்மீர் பண்டார்' (மாதந்தோறும் ரூ.1,500 முதல் ரூ.1,700) திட்டத்திற்கு மாற்றாக, தற்போதைய புதிய அரசு 'அன்னபூர்ணா பண்டார்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை இரண்டு மடங்காக, அதாவது ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்குவோம் எனப் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே இந்த அதிரடி அமலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் முற்றிலும் வெளிப்படையான முறையில், எவ்வித இடைத்தரகர்களும் இன்றித் தகுதியான பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட, அரசுப் பணியில் இல்லாத ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த ரூ.3,000 நிதியுதவி, அவர்களது ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 'நேரடிப் பணப் பரிமாற்ற' (DBT) முறையின் கீழ் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்துடன் சேர்த்து, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகையையும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய அரசு ஏற்கனவே அங்கு நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கத்தில் மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ள இந்தச் சூழல், தமிழக அரசியல் களத்திலும் உற்றுநோக்கப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்றால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 'மகளிர் உரிமைத் தொகை' வழங்கப்படும் எனத் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக அறிவித்திருந்தது.