உலகமே நிம்மதிப் பெருமூச்சு... ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டித்தார் டிரம்ப்... ஆனாலும் தொடரும் கடல் முற்றுகை!

 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீடித்து வரும் போர் மேகங்கள் சற்றே கலைந்துள்ளன. ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இப்போதைக்குத் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்று, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஈரானுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் இந்த 'போர்நிறுத்த நீட்டிப்பு' அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை, "நேரம் முடிந்துவிட்டது, ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும்" என எக்ஸ் மற்றும் ட்ரூத் சோசியல் தளங்களில் அனல் பறக்கப் பதிவிட்டு வந்த டிரம்ப், இன்று தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். "பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் ஒரு தெளிவான அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படும்" என டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் சில முக்கிய முட்டுக்கட்டைகள் உள்ளன: ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டை விட்டு வெளியேற்ற ஈரான் மறுத்து வருகிறது. ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதை "போர் நடவடிக்கை" எனக் கண்டித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, முற்றுகை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சந்தேகம் எனச் சிக்னல் கொடுத்துள்ளார்.

உலக நாடுகளின் எரிசக்திப் போக்குவரத்திற்கு முக்கிய ஆதாரமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அமெரிக்காவுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஈரானியத் தலைமையில் பிளவுகள் இருப்பதாக டிரம்ப் கூறினாலும், அங்கு புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தலைமையில் ஆட்சி உறுதியாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னதாக பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த போர்நிறுத்தம் காலவரையற்றது என்றாலும், அமெரிக்காவின் 'அதிகபட்ச கோரிக்கை'களை ஈரான் ஏற்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் குண்டுவீச்சைத் தொடங்கலாம் என்பதால் வளைகுடா நாடுகளில் இப்போதும் போர் அச்சம் முழுமையாக நீங்கவில்லை.