உலக நாடுகள் பிரமிப்பு... சீனாவின் 'CE-25A' மின்சார பயணிகள் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!
சீனா உள்நாட்டிலேயே முதன்முறையாக வடிவமைத்துத் தயாரித்துள்ள 'CE-25A' மின்சாரப் பயணிகள் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. பசுமை ஆற்றல் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் வகையில் இந்த நவீன விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 400 கிலோமீட்டர் தூரம் வரை தடையின்றிப் பயணிக்கக்கூடிய ஆற்றலை இது பெற்றுள்ளது.
எரிபொருள் பயன்பாடு இல்லாததால் கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, குறுகிய தூரப் பயணங்களுக்கு மிகவும் சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மாற்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் வணிக ரீதியான மின்சார விமானப் போக்குவரத்தை விரைவுபடுத்த சீன விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.