மாணவியை முத்தமிட்ட இளைஞர், அவரது தந்தையின் ஆடைகளைக் களைந்து நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் சென்ற சிறுமியின் குடும்பத்தினர்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிறுமிக்கு முத்தமிட்ட விவகாரத்தில், 18 வயது இளைஞர், அவரது தந்தை மற்றும் நண்பரைச் சிறுமியின் குடும்பத்தினர் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிறுமிக்கு முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறுமியின் சித்தப்பா உடனடியாகச் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்துச் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள், அந்த இளைஞரையும் அவரது நண்பரையும் பிடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், இளைஞரின் தந்தையையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, மூவரின் ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் உட்பட 3 பேரை முதற்கட்டமாகக் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.