"ரீல்ஸ் போட்டு ஆட்சியை மாற்றிய இளைஞர்களே.. இதுக்கும் ரீல்ஸ் போடுங்க!" – அன்புமணி அழைப்பு!

 
அன்புமணி பள்ளிக்கரணை சதுப்புநிலம்

சென்னை மாநகரின் மிக முக்கிய இயற்கை அரணான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப்  பாதுகாக்க வலியுறுத்தி, பாமக சார்பில் பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் இன்று சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் தொடங்கப்பட்டது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் இந்த இயக்கத்தை முறைப்படி கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டறிக்கைகளைப் பொதுமக்களிடம் வழங்கிய அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு பெரிய அளவில் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், சுற்றுச்சூழல் விவகாரத்திலும் இளைஞர்கள் தங்களது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்:

"இளைஞர்களே.. சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தமிழகத்தில் ஒரு பெரிய ஆட்சி மாற்றத்தையே நீங்கள் கொண்டு வந்தீர்கள். அதே வேகத்தோடு இப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு நேரில் போய் பாருங்கள். அங்குச் சட்டவிரோதமாகக் குப்பைகளை எரிக்கிறார்கள். இயற்கையை அழிக்கும் இந்த அவலங்களையெல்லாம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' போடுங்கள். அப்போதுதான் இந்த நிர்வாகத் தூக்கம் கலையும்."

சென்னையின் தற்போதைய நிலத்தடி நீர் மற்றும் உள்கட்டமைப்புப் பாதிப்புகளுக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளே காரணம் என்று அன்புமணி ராமதாஸ் சாடினார். முன்பு 15,000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாகத் தற்போது வெறும் 2,500 ஏக்கராகச் சுருங்கிவிட்டது என்று அவர் வேதனை தெரிவித்தார்.

ஒட்டுமொத்த வேளச்சேரி பகுதியே இந்தச் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதுதான் என்றும், சென்னை மாநகரம் உயிர்வாழப் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த கால ஆட்சிகளின் தவறான நகர்ப்புறத் திட்டமிடலைக் கடுமையாக விமர்சித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள ஈரநிலக் குழு மற்றும் சதுப்பு நில ஆணையம் ஆகியவை எதற்கு இருக்கின்றன என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்று குற்றம் சாட்டினார்:

கடந்த ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்  பொறுப்பாளராக இருந்தவர் சேகர்பாபு. இவரைப் போன்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் இருந்ததால்தான் சென்னை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றது. சென்னையின் அடையாளங்களாகக் கருதப்படும் வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புகள் அனைத்தும் ஒருகாலத்தில் ஏரிகளாக இருந்த இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான்.

கடந்த கால ஆட்சியாளர்களுக்கு ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் குறித்த எந்தவொரு அடிப்படைப் புரிதலும் இல்லை என்று விமர்சித்த அன்புமணி, தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நாளொன்றுக்குச் சுமார் 5,000 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இப்படியே போனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முற்றிலுமாக அழிந்து, சென்னையின் பெரும்பாலான நிலத்தடி நீர் குடிக்க முடியாத அளவிற்கு உப்பு நீராக மாறிவிடும் அபாயம் உள்ளதாகவும், எனவே உடனடியாகத் தமிழகத்தில் உள்ள 26,800 ஏக்கர் ஈரநிலங்களை அரசு மறுவரையறை செய்து பாதுகாக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.