ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்... 200 அடி பள்ளத்தில் விழுந்த   வாலிபர்  !

 

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த 28 வயதான கார்த்திக் என்பவர், தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து அண்மையில் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர் தேனி மாவட்டம் குரங்கணி மலை உச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொழுக்குமலைக்குச் சூரிய உதயத்தைக் காண்பதற்காக ஜீப்பில் சென்றுள்ளனர். கொழுக்குமலையின் அழகிய இயற்கை சூழலையும் சூரிய உதயத்தையும் நண்பர்கள் குழுவினர் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

காலை 8 மணியளவில் அங்கிருந்த சிங்கப்பாறை என்ற பகுதியில் அவர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் எதிர்பாராத விதமாக மிக ஆபத்தான எல்லைப் பகுதியில் நின்றபோது கால் நழுவி 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார். நண்பர்கள் அளித்த அவசரத் தகவலின் பேரில் கேரளத் தீயணைப்பு வீரர்களும், குரங்கணி மற்றும் போடி பகுதி காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கை சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்ட பகுதியான சிங்கப்பாறையில் புகைப்படங்கள் எடுக்கும் மோகத்தால் பயணிகள் ஆபத்தை உணராமல் நுழைகின்றனர். கடந்த மாதமும் இதே இடத்தில் ஒருவர் பள்ளத்தாக்கில் குதித்து உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. எனவே அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் உடனடியாகத் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை வாலிபர் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.