நான்கு உறுப்புகள் இல்லை.. ஆனால் உலக சாம்பியன்... ஷீத்தல் தேவியையே வீழ்த்தி பாயல் நாக் இமாலயச் சாதனை!
"தைரியம் மற்றும் நேர்மறைச் சிந்தனை என்ற வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் இவர்தான்" எனத் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவால் புகழப்பட்டுள்ளார் பாரா வில்வித்தை வீராங்கனை பாயல் நாக்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எளிய தினக்கூலி கொத்தனாரின் மகள்தான் இந்த பாயல் நாக். தனது எட்டு வயதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், பாயல் தனது இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் இழந்தார். நான்கு உறுப்புகளையும் இழந்த போதிலும் அவர் முடங்கிவிடவில்லை. முதலில் தனது வாயால் ஓவியங்கள் வரையப் பழகியவர், பின்னர் வில்வித்தையின் மீது கவனம் செலுத்தினார்.
கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் வில் எய்து உலகையே வியக்க வைத்த ஷீத்தல் தேவிதான் பாயல் நாகின் முன்மாதிரி. ஷீத்தல் தேவியை உருவாக்கிய அதே பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்ற பாயல், இந்த ஏப்ரல் 2026-ல் பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், தனது ரோல் மாடலான ஷீத்தல் தேவியையே தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார் பாயல். பாயல் நாகின் இந்தச் சாதனையைக் கண்டு வியந்த ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில், "நான் எப்போதெல்லாம் மனச்சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் பாயல் மற்றும் ஷீத்தலின் படங்களைப் பார்ப்பேன். இந்தச் சாம்பியன்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு ஊக்கத்தின் ஆதாரமாக இருப்பார்கள். நான்கு உறுப்புகள் இல்லாத ஒரு பெண்ணை உலக சாம்பியனாக மாற்றிய அந்தப் பயிற்சியாளருக்கு எனது சல்யூட்" எனத் தெரிவித்துள்ளார்.
உடல் ஊனம் என்பது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள பாயல் நாக், இன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகமாக மாறியுள்ளார். வறுமை மற்றும் விபத்து எனப் பல சோதனைகளைத் தாண்டி அவர் எட்டியுள்ள இந்தச் சிகரம், சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஒரு பாடமாகும்.