இன்னும் 4 நாள் தான் இருக்கு... மார்ச் 26 கடைசி தேதி... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மறந்துடாதீங்க!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியுள்ள குடிமக்கள் தங்கள் பெயரைச் மார்ச் 26ம் தேதிக்குள் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஜனநாயகக் கடமையாற்றத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம்-6 (Form-6)-ஐப் பயன்படுத்த வேண்டும். வாக்காளர்கள் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்னதாகவே சரிபார்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக  https://www.voters.eci.gov.in/ என்ற தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதே போன்று கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ‘Voter Helpline’ அல்லது ‘ECINet’ கைப்பேசி செயலியைப் பயன்படுத்தலாம்.

தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 151 செலவினப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வேட்புமனு தாக்கல், பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளுக்கான அனுமதி கோருவதற்கு http://suvidha.eci.gov.in/ என்ற தளத்தைப் பயன்படுத்தலாம். இதுவரை இதன் மூலம் 2,443 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 737 விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

குடிமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க 'வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் (BLO) தொலைபேசி வழித் தொடர்பு' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்க, உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.