சபரிமலையில் நெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! தேவஸ்தானம் கவலை – ஐயப்ப பக்தர்களுக்கு சிக்கலா?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால யாத்திரை தொடங்க உள்ள நிலையில், நெய் இருப்பு குறைந்து வருவது திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தேவஸ்தான வாரியத் தலைவர் கே.ஜெயகுமார் கூறுகையில், கோவிலில் தற்போது உள்ள நெய் இருப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், புதிய நெய் விநியோகம் நவம்பர் 17-ம் தேதி முதல்தான் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுவரை பக்தர்களின் தேவையைச் சமாளிக்க கூடுதல் நெய் கொள்முதல் செய்வது குறித்து வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நெய் கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பான சட்டப் பிரச்சினைகள் இருப்பதால், சட்ட ஆலோசனை பெற்ற பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரவணை பாயாசம் மற்றும் அப்பம் தயாரிப்புக்குத் தேவையான இருப்பில் தற்போது பிரச்சினை இல்லை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்களுக்கான பிரசாத விநியோகம் பாதிக்கப்படாது என வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், நெய் கொள்முதலுக்காக மில்மா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் லிட்டர் நெய்யை லிட்டருக்கு ரூ.660 என்ற விலையில் வழங்க மில்மா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதி முடிவை சட்ட ஆலோசனைக்குப் பிறகு தேவஸ்தான வாரியம் எடுக்க உள்ளது