"பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" - பாஜக தலைமைக்கு சரத்குமார் எச்சரிக்கை!

 

பாஜகவுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த பிறகு, அக்கட்சியில் தமக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து நடிகர் சரத்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தனது கட்சியைப் பாஜகவுடன் இணைத்த சரத்குமார், தற்போது கட்சியில் நிலவும் புறக்கணிப்பு குறித்துக் கடும் அதிருப்தியில் உள்ளார். "பாஜகவில் இணைந்து நீண்ட காலமாகியும் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஒரு சாதாரண உறுப்பினராக மட்டும் என்னால் செயல்பட முடியாது; அதிகாரமும் பொறுப்பும் இருந்தால்தான் கட்சிக்காக உழைக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாகத் தன்னுடன் பயணித்த தொண்டர்கள், "உங்களின் அறிவும் ஆற்றலும் தெரிந்தும் கட்சி ஏன் உங்களை மதிக்கவில்லை?" எனக் கேட்பதாகவும், திருச்சி பொதுக்கூட்ட மேடை விளம்பரங்களில் தனது புகைப்படம் கூட இடம்பெறாதது அவர்களைப் பெரும் வேதனையடையச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"மாநிலத்திலும் மத்தியிலும் பாஜகவிடம் அதிகாரத்தைக் கேட்போம். இதற்காகத் தேசியத் தலைமைக்கும், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கடிதம் எழுதவுள்ளேன்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் இது தொடர்பாகக் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், அவர் நிச்சயம் இதற்குச் செவிசாய்த்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் எனத் தான் நம்புவதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். "பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்று அவர் குறிப்பிட்டிருப்பது, ஒருவேளை உரியப் பொறுப்புகள் வழங்கப்படாவிட்டால் அவர் மாற்று முடிவை எடுக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

கடந்த 2024 தேர்தலில் தனது கட்சியைப் பாஜகவுடன் இணைத்துத் தீவிரப் பிரசாரம் செய்த போதிலும், தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மீண்டும் அவர் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.