"அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருக்கு; இனி 10 தொகுதிகளில் கூட திமுக ஜெயிக்காது" - அமைச்சர் நிர்மல்குமார் 

 

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் பணம் கொடுக்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் அரசிடம் உள்ளதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், "அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான அனைத்து ஆதாரங்களும் எங்கள் கைவசம் உள்ளன. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. இது ஒரே நாளில் நடந்த பிரச்சனை அல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த வசூல் நடவடிக்கை ஆகும். பல தனியார் கல்வி நிறுவனங்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார்களை அளித்துள்ளன."

"இப்போது சில தொகுதிகளில் வெற்றி பெற்று வந்திருக்கும் திமுக, இனிவரும் தேர்தல்களில் 10 தொகுதிகளில் கூட வெற்றி பெறப் போவதில்லை. எப்பொழுது தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். கடந்த திமுக ஆட்சி காலத்தில் தீபாவளி பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு சூழல் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பண்டிகைக் காலத்தில் மாநிலத்தில் எங்கும் தேவையில்லாமல் மின்வெட்டு செய்யக் கூடாது என்று மின்சாரத் துறை அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்துப் பாராட்டிப் பேசிய அவர், "மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முதலமைச்சர் விஜய் கடந்த 6 மாதங்களாக எவ்வித ஓய்வுமின்றித் தொடர்ந்து உழைத்து வருகிறார். தினமும் 14 முதல் 15 மணி நேரம் வரை தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்" என்று குறிப்பிட்டார்.