"நெல் மூட்டைக்கு இனி ரூ.40 லஞ்சம் கிடையாது; வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும்" - அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி!
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களுக்கான ரேஷன் விநியோகம் குறித்து மிக முக்கியமான அறிவிப்புகளை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC), விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய வரும் போது, சில ஊழியர்களால் ஒரு மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய் வரை கட்டாய லஞ்சம் வாங்கப்படுவதாக நீண்டகாலமாகப் புகார்கள் இருந்து வந்தன.
இந்த நடைமுறை குறித்துப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், "நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 லஞ்சம் வாங்கும் நடைமுறை இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும். விவசாயிகள் தங்களின் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை விற்பனை செய்ய எவருக்கும் லஞ்சம் தரத் தேவையில்லை. முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்' எவ்விதத் தொய்வும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தைச் சீராக நடத்துவதற்கும், ரேஷன் பொருட்கள் மக்களைச் சென்றடைவதற்கும் தேவையான நிரந்தர நிதி கட்டமைப்பு மற்றும் வசதிகள் தற்போதைய அரசால் முழுமையாக ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழக மக்களுக்கு அளித்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் தவெக ஆட்சியில் நிச்சயம் முறைப்படி நிறைவேற்றப்படும். அதற்கான முதற்கட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொள்முதல் நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் ரேஷன் விநியோக மேம்பாடு குறித்த அமைச்சரின் இந்த அறிவிப்பு, தமிழக விவசாயிகளிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.