நேர்காணல் கிடையாது... 461 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் காலியாக உள்ள, நேர்காணல் இல்லாத 461 தொழில்நுட்பப் பதவிகளை நிரப்புவதற்கான 'ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு' அறிவிப்பினை தற்பொழுது டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி (அறிவிப்பு எண்: 04/2026), தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 27, 2026 முதல் ஜூன் 25, 2026 நள்ளிரவு 11:59 மணி வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் உள்ள 461 காலியிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 45-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுப் பிரிவுகளின்கீழ் நிரப்பப்பட உள்ளன.
பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்டிசியன் (குடும்ப நலத்துறை): 62 இடங்கள், உதவிப் பொறியாளர் (ஊரக வளர்ச்சித் துறை): 50 இடங்கள், உதவிப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை): 38 இடங்கள், உதவிப் பொறியாளர் (சிவில் - நீர்வளத்துறை): 33 இடங்கள், உதவிப் பொறியாளர் (விவசாயப் பொறியியல்): 64 இடங்கள், துணைப் புகைப்படக் கலைஞர் (தமிழ் வளர்ச்சித் துறை): 23 இடங்கள்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பதவிகளுக்கு ஏற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் துறைகளில் இளங்கலை (B.E / B.Tech), அறிவியல் இளங்கலை (B.Sc), முதுகலை (M.Sc), மேலாண்மை (MBA) அல்லது அதற்கு இணையான தொழில்நுட்பக் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள் ஆகும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மிக முக்கியச் சிறப்பம்சமே, இதற்கு எவ்வித நேர்காணலும் கிடையாது என்பதாகும். விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையிலேயே நேரடியாகப் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு தமிழக அரசுப் பணிக்குத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தொழில்நுட்பத் தேர்வர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.