அடுத்த சம்மன் கிடையாது... இனி தேர்தல் தான் - சென்னை வந்தடைந்தார் விஜய்!

 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று மாலை தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்துச் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ஏற்கனவே இரண்டு முறை விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக நேற்று டெல்லி தலைமையகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

நேற்று காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற்ற இந்த விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் கேட்டிருந்த கூடுதல் ஆவணங்கள் மற்றும் தரவுகளை விஜய் தரப்பினர் சமர்ப்பித்தனர்.

இந்த விசாரணையின் போது விஜய்யுடன் கட்சியின் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட 7 பேர் டெல்லி சென்றிருந்தனர். இன்று திங்கட்கிழமை மதியம் வரை விசாரணை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டதால், மேற்கொண்டு விசாரணை தேவையில்லை எனச் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து புறப்பட்ட விஜய், நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனது நீல நிற காரில் ஏறி நேராக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றார். அவர் வந்தபோது விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விஜய் சென்னை திரும்பியுள்ளது அவரது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.