"தவெக ஆட்சியில் கமிஷன், கரெப்ஷனுக்கு இடமில்லை" - முதல்வருடனான சந்திப்பிற்குப் பின் வைகோ பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்துப் பேசினார். நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்திருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இந்த உயர்மட்டச் சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தவெக அரசின் நிர்வாகத் திறன் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக அரசு குறித்து பேசிய வைகோ, "முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்தே நிர்வாகத்தில் 'கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயுள்ளது. ஊழலற்ற, நேர்மையானதொரு நிர்வாகத்தை இந்த அரசு வழங்கி வருகிறது."
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்தியதை விவரித்தார். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மதிமுக தொடர்ந்து அதற்கு எதிராக எண்ணற்ற களப்போராட்டங்களை நடத்தியுள்ளது. இறுதியாக நீதிமன்றச் சட்டப்போராட்டம் மூலமாகவே ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம்.
தற்போது அந்த ஆலையை வேறு ஒரு வடிவத்தில் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தவெக அரசு எந்தச் சூழலிலும் மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
அரசியல் ரீதியாக மட்டுமன்றி தனிப்பட்ட முறையிலும் சில கோரிக்கைகளை வைகோ முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக வருமாறு முதலமைச்சர் விஜய்க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவது குறித்தும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 2 மதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா? என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வைகோ, "மதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வார்களா என்பதை இப்பொழுதே திட்டவட்டமாகச் சொல்ல முடியாது" என்று கூறி, கூட்டணி மாற்றம் குறித்த யூகங்களுக்கு இறுதிப் புள்ளி வைக்காமல் விடைபெற்றார்.