"சீனியாரிட்டிக்கு இடமில்லை... 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர்... அதிக வெற்றி தருபவருக்கே அமைச்சர் பதவி - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம் மற்றும் நிர்வாகிகளுக்கான எச்சரிக்கை குறித்து உரையாற்றினார். 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றியை உறுதி செய்யும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அடுத்த ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "அடுத்த முறை அமையவுள்ள நமது ஆட்சியில் சீனியாரிட்டி என்பது இரண்டாம்பட்சம் தான். உங்களது பொறுப்பில் உள்ள தொகுதிகளில் யார் அதிக வெற்றியைப் பெற்றுத் தருகிறார்களோ, அவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதை இப்போதே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று அதிரடியாக அறிவித்தார். இது கட்சிக்குள் இருக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கின்றன, நம் தொகுதியில் நடப்பது தலைவருக்குத் தெரியவா போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் கண்ணும் காதும் இருக்கின்றன. அத்தனை தகவல்களும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்து கொண்டிருக்கிறது" என்று நிர்வாகிகளை எச்சரித்தார்.

"வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். செல்வாக்கு உள்ளவர்களுக்கோ அல்லது யாரையாவது பிடித்து சிபாரிசு செய்பவர்களுக்கோ சீட் கிடைக்காது. மக்களுக்குப் பிடித்தவர்களுக்கு மட்டுமே இந்த முறை சீட் வழங்கப்படும். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் தங்களை வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பவர்களாகக் கருதிக் கொள்ள வேண்டாம். உங்கள் வேலை கழகத்தின் வெற்றியை உறுதி செய்வது மட்டுமே."

கூட்டணி பலம் மற்றும் அரசின் நலத்திட்டங்களை (மகளிர் உரிமைத் தொகை ₹5,000, பொங்கல் பரிசு ₹3,000 போன்றவை) முன்வைத்து மக்களிடம் செல்லுமாறு அறிவுறுத்திய அவர், "கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே நமது இலக்கு. தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சிப் பூசலும் இருக்கக் கூடாது. குழப்பம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும்" என்று ஸ்ட்ரிக்ட்டாகத் தெரிவித்தார்.