“விஜய் மேல பிரச்சனையில்ல... மதுராந்தகம் வேட்பாளர்தான் பிரச்சனை..” - தவெக எம்எல்ஏ காமாட்சியின் வீடியோவால் பரபரப்பு!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு எதிராக நிலவி வரும் அதிருப்திக்கு மத்தியில், பல்லாவரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் குறித்துப் பேசியுள்ள தவெக எம்எல்ஏ காமாட்சி, "கட்சித் தலைவர் விஜய் மீது பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் வேட்பாளர்தான் பிரச்சனை; வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ள மரகதம் குமரவேலுக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர் தீவிர போலீஸ் பாதுகாப்புடனேயே தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
தவெக கட்சியின் உட்கட்சி நிலவரம் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்துச் சொந்தக் கட்சி எம்எல்ஏவே இதுபோன்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.