undefined

ரோடு வசதி கூட இல்லை... திமுக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்!

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், வருசநாடு மற்றும் வாலிப்பாறை இடையே சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், இன்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட கடமலை மற்றும் மயிலாடும்பாறை ஒன்றியங்களில், வருசநாடு - வாலிப்பாறை இடையே சாலை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாகவே நிலுவையில் உள்ளது.

குறிப்பிட்ட அளவு சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து ஆய்வு செய்து, சாலைப் பணிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தியும், இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை.

சாலை அமைவதற்காக, வனத்துறையினர் கேட்கும் குறிப்பிட்ட இடத்திற்குப் பதிலாக, பொதுமக்கள் 2 மடங்கு நிலத்தைத் தர முன்வந்தனர். மேலும், வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வேலி அமைப்பது, மரக்கன்றுகள் நட்டுப் பராமரிப்பது போன்ற உறுதிமொழிகளை அளித்தபோதும், வனத்துறையினர் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தச் சாலைப் பணி நிலுவையில் உள்ளதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், கிராம சபைக் கூட்டங்களைப் புறக்கணித்தல் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அத்துடன், சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரவிருக்கும் தேர்தலையும் புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று வருசநாடு மற்றும் தும்மக்குண்டு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன் வருகை தந்தார். அப்போது மயிலாடும்பாறை கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சாலை அமைக்கும் பணியை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என ஆவேசமாகக் கேட்டு, எம்.எல்.ஏ.வுடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் திடீர் முற்றுகை மற்றும் ஆவேசமான வாக்குவாதத்தால் அதிர்ச்சியடைந்த மகாராஜன் எம்.எல்.ஏ.வும், அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். இன்னும் 15 நாட்களில் ஒரு கமிட்டி அமைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் சாலை அமைக்கும் பணிக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

இந்த உறுதியை ஏற்ற பொதுமக்கள், 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், ஆடு, மாடுகளைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். இந்தச் சம்பவத்தால் மயிலாடும்பாறை கிராமத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.