யுபிஐ கிடையாது.. ரூ.2,000-க்கு மேல் போனால் இனி பணம் மட்டும் தான் - எரிபொருள் கட்டணங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ₹2,000-க்கு மேற்பட்ட தொகையிலான பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவோருக்கு யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனை முறை கைவிடப்பட்டு, ரொக்கப் பணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 16, 2026 முதல் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 4,700 பெட்ரோல் பங்குகளில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. வாகன ஓட்டிகளின் எரிபொருள் கட்டணம் ₹2,000-ஐத் தாண்டினால், அந்தத் தொகையை அவர்கள் ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

₹2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகர் தள்ளுபடி விகிதம் என்ற கூடுதல் சேவைக்கட்டணம் விதிக்கப்படுவதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும்.

ஒவ்வொரு ₹2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கும் ரூ.5 எம்.டி.ஆர் மற்றும் 18% ஜி.எஸ்.டி சேர்த்து மொத்தம் ரூ.5.90 கூடுதல் செலவாகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 100 பரிவர்த்தனைகள் நடைபெறும் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.17,400 கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனச் சங்கத் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதிலும் உள்ள 4,700 பெட்ரோல் பங்குகளைக் கணக்கிடும் போது, இதன் காரணமாக டீலர்களுக்கு மாதந்தோறும் மொத்தம் ரூ.8.17 கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.