தடுப்பூசியோ, மருந்தோ கிடையாது... காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா வைரஸ்... பலி எண்ணிக்கை 1,354 ஆக உயர்வு!

 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றின் பரவல் மிகக் தீவிரமடைந்து வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காங்கோவில் இதுவரை 3,075 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,354 பேர் உயிரிழந்துள்ளனர். 556 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ள நிலையில், 755 பேர் தொடர்ந்து மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இத்தூரி, வடக்கு கிவு, தெற்கு கிவு, ஹாட்-உவேலே மற்றும் சோபோ ஆகிய 5 முக்கிய மாகாணங்களில் நோய் கண்டறியப்பட்டு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் 'பண்டிபுக்யோ' வகையைச் சேர்ந்தது என்பதால், இதற்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட நேரடித் தடுப்பூசியோ அல்லது மருந்தோ பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், இதற்கான புதிய தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த 2 முதல் 4 மாதங்களுக்குள் தடுப்பூசிகள் வரக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் போர்ச் சூழல், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் போதிய சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ அரசு பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.