ஒரே நாளில் 84 திருமணங்கள்... திருநங்கை சஞ்சனா நெகிழ்ச்சி!
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் ஸ்ரீ தேவநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத முதல் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு ஒரே நாளில் 84 ஜோடிகளுக்குக் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
ஆவணி மாதத்தின் சிறப்பு முகூர்த்த நாளான இன்று, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 84 ஜோடிகளுக்குத் திருமணங்கள் தடையின்றி நடைபெற்றன. இந்த 84 திருமணங்களில், கடலூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சஞ்சனா என்பவருக்கும், அவரது காதலன் நாகராஜனுக்கும் நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பல தடைகளையும் கடந்து, இருவீட்டுப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் பூரண சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும் இத்திருமணம் வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி நடைபெற்றது.
திருநங்கைகளின் வாழ்வியலில் குடும்பத்தினரின் ஆதரவோடு நடைபெறும் இதுபோன்ற திருமணங்கள், சமூகத்தில் பெரும் மாற்றத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.