"தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும்; திமுகவின் கனவு கானல் நீராகும்" - மதுரையில் பிரதமர் மோடி ஆவேசம்!
மதுரை மண்டேலா நகரில் இன்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசு மற்றும் அதன் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மேடைக்கு வந்த பிரதமர் மோடி, தனது உரையைத் தமிழில் தொடங்கி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பிரதமர் மோடி தனது உரையில் "தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது. அது வெறும் கற்பனைக் கோட்டையாகவும், கானல் நீராகவுமே முடியும். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான். "மதுரை என்றாலே திமுகவுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. மதுரையில் 'மாபியா மாடல்' அரசை உருவாக்கியது திமுகதான். பணம் தங்களுக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பதே திமுகவின் மாடல். தமிழகத்தைக் கொள்ளையடித்தது திமுக ஆட்சிதான் என்றும், மக்களுக்காக மற்றவர்கள் பணியாற்றுவதைத் திமுக அரசு தடுப்பதாகவும் சாடினார்.
மத்திய அரசின் திட்டங்களைத் தமிழக அரசு முடக்குவதாக குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக அரசின் இழுத்தடிப்பால் இன்னும் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மலேசியாவில் திருவள்ளுவர் மையம்: உலக அளவில் தமிழைப் பெருமைப்படுத்தும் விதமாக மலேசியாவில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்பட்டு வருவதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். "திமுக எதைச் செய்தாலும், இறுதியில் முருக பக்தர்களே வெல்வார்கள்" என்று கூறினார்.