இனி ஒரு வீட்டிற்கு 2 சிலிண்டர் இணைப்பு கிடையாது... வெளியானது உத்தரவு!

 

இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பாரம்பரிய சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாற்றாக, வீடுகளுக்கே நேரடியாக குழாய்கள் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு  விநியோகத் திட்டம்  வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், எரிபொருள் மானிய முறைகேடுகளைத் தடுத்து, தேவையற்ற எரிவாயுப் பதுக்கல்களை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

புதிய அரசாணையின்படி, வீடுகளில் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்பு வைத்துள்ள நுகர்வோருக்கு, புழக்கத்தில் உள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. இனி ஒரே முகவரியில் இரண்டு விதமான எரிவாயு இணைப்புகளையும் நுகர்வோர் வைத்திருக்க முடியாது.

பொதுமக்களின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்கவும் மத்திய அரசு காலக்கெடு மற்றும் விதிமுறைகளை நுகர்வோருக்கு விதித்துள்ளது. ஒரு நுகர்வோர் தனது இல்லத்தில் புதிய குழாய்வழி எரிவாயு இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் , தங்களது பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பைத் தங்களது எரிவாயு விநியோகஸ்தரிடம் முறைப்படி துண்டிக்க வேண்டும்.

சிலிண்டர் இணைப்பை ஒப்படைக்கும் நுகர்வோருக்கு, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் 'பாதுகாப்பு மாற்றுச் சீட்டு' ஒன்று வழங்கப்படும். மத்திய அரசின் இந்த புதிய விதியால் நுகர்வோருக்கு எதிர்காலத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனத் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த மாற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நுகர்வோர், எதிர்காலத்தில் குழாய்வழி எரிவாயு வசதி இல்லாத வேறு பகுதிகளுக்கோ அல்லது இதர மாவட்டங்களுக்கோ குடிபெயர நேரிட்டால், தங்களது பழைய மாற்றுச் சீட்டைக் காட்டி எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மிக எளிதாக மீண்டும் புதிய எல்பிஜி சிலிண்டர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கை, எரிவாயு விநியோகச் சங்கிலியைச் சீரமைப்பதுடன், சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கி, சிலிண்டர் வசதி இன்னும் சென்றடையாத சாமானிய ஏழைக் குடும்பங்களுக்குப் புதிய இணைப்புகளை வழங்கப் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.