இனி ECR ரூட்டில் நெரிசல் கிடையாது... சென்னை - பாண்டிச்சேரி இடையே சொகுசுப் படகு சேவை கொண்டு வரத் தமிழக அரசு திட்டம்!

 

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாகப் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் படகு சேவையை அறிமுகப்படுத்தத் தமிழ்நாடு கடல்சார் வாரியம்  புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், பயணிகளுக்குப் புதிய கடல்வழிப் பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை துறைமுகம்/கடற்கரைப் பகுதியிலிருந்து புறப்பட்டு, மாமல்லபுரத்தில் நின்று புதுச்சேரியைச் சென்றடையும் வகையில் இந்தச் சொகுசுப் படகு வழித்தடம் திட்டமிடப்பட்டு வருகிறது. இத்திட்டம் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த சுற்றுலாப் படகு சேவையைத் திறம்பட இயக்கிப் பராமரிப்பதற்காகத் தனியார் படகு சேவை நிறுவனங்கள் மற்றும் கடல்சார் சுற்றுலா அமைப்புகளிடம் இருந்து விருப்பக் கோரல் மனுக்களை தமிழ்நாடு கடல்சார் வாரியம் தற்போது வரவேற்றுள்ளது.

இச்சேவை பயன்பாட்டிற்கு வரும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையின் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டுப் பயண நேரம் கணிசமாகக் குறையும். மேலும், இது சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுப் பணிகள் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு கடல்சார் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.