"தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையாது... மீண்டும் தேர்தல் நடத்துவதே நல்லது" - ஸ்ரீதர் வேம்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தனி கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அடுத்தகட்ட நகர்வு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல தொழில்முனைவர் ஸ்ரீதர் வேம்பு தனது 'X' (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட முடியாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "தற்போதுள்ள அரசியல் சூழலில் மெஜாரிட்டி எண்கள் கிடைக்கவில்லை. இக்கட்டான நிலையில் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கமும் பல்வேறு இழுபறிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவாது. தற்காலிகமாகத் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
"மீண்டும் ஒருமுறை தேர்தலை நடத்துவதே இதற்குச் சரியான தீர்வாக இருக்கும். ஆனால், அந்தத் தேர்தல் 'வாக்குக்குப் பணம்' என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், மிகக் கடுமையான சட்ட அமலாக்கத்துடன் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நிலையான அரசாங்கம் இல்லாதது மாநிலத்தின் முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற கவலையை ஸ்ரீதர் வேம்பு தனது பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். குதிரை பேரம் போன்ற ஜனநாயக விரோதச் செயல்களைத் தவிர்க்கத் தேர்தலே சிறந்த வழி என்பது அவரது கருத்தாக உள்ளது.
ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்திற்கு திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. "ஏற்கனவே மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மீண்டும் தேர்தலை நடத்துவது வீண் செலவு" என அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.