போலீஸ் தடியடியிலிருந்து தப்பிக்க ட்ரெஸுக்குள் தெர்மாகோல் - இளைஞரின் வைரலாகும் ஐடியா!

 

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல் துறையினரின் தடியடியிலிருந்து தப்பிப்பதற்காக இளைஞர் ஒருவர் தன் உடலுக்குள் தெர்மாகோல் துண்டுகளை வைத்து வினோதமான முறையில் தயாரான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக இளைஞர் ஒருவர் புதுமையான யோசனையைக் கையாண்டுள்ளார்:

போராட்டத்தில் ஒருவேளை தடியடி நடத்தப்பட்டால் அடியிலிருந்து தப்ப, தன் சட்டையினுள்ளும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் தெர்மாகோல் துண்டுகளை வைத்து நூதன முறையில் ஆடை அணிந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்படுவதைத் தவிர்க்க இருசக்கர வாகன ஹெல்மெட்டையும் அணிந்து, இந்த ஏற்பாட்டை 'அவசர பாதுகாப்பு கருவி' என்ற தலைப்பில் வீடியோவாகத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்புக் கவசங்களோடு புறப்பட்ட அந்த இளைஞர், கையில் அழகான பூங்கொத்து ஒன்றையும் ஏந்திச் சென்றுள்ளார்:

போராட்டத்தில் வன்முறையைத் தவிர்த்து, அமைதியான வழியில் கோரிக்கைகளை வலியுறுத்துவதை உணர்த்தவே கையில் பூங்கொத்துடன் செல்வதாக அவர் அந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் தடியடியிலிருந்து தப்பிக்க இளைஞர் கையாண்ட இந்தச் சுவாரஸ்யமான ஐடியா நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது: இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும், 12 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த வித்தியாசமான முயற்சிக்கு விருப்பம் (Likes) தெரிவித்துப் பகிரந்து வருகின்றனர்.