"அரைகுறை தன்மையோடு நிர்வாகத்தை நடத்துகின்றனர்!" - செந்தில் பாலாஜி!

 

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் டெண்டர் மற்றும் கொள்முதல் தரவுகள் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில், ஒப்பந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் புதிய தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

மின்வாரியத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தத் தரவுத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தவெக அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடினார்.

"மாநிலத்தில் ஆட்சி மாறலாம், ஆனால் அரசுத் துறைகளைத் தொடர்ந்து வழிநடத்தும் உயர்மட்ட அதிகாரிகள் மாறப் போவதில்லை. அப்படியிருக்கும் போது, மின்வாரியத்தின் மிக முக்கிய ஆவணங்கள் இருக்கும் கணினிப் பிரிவுக்குள் இத்தகைய திருட்டுப் போகும் அளவிற்குப் பாதுகாப்புத் குறைபாடு இருந்தது எப்படி?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் தற்பொழுது வெறும் புகார்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மட்டுமே அரங்கேறி வருகின்றன. இந்தத் தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது இதுவரை ஏன் முறையான துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தற்போதைய ஆட்சியாளர்கள் ஒருவித அரைகுறை தன்மையோடுதான் மாநில நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி" என்று செந்தில் பாலாஜி சாடியுள்ளார்.

மின்வாரியக் கொள்முதல் மற்றும் டெண்டர்களில் முறெகேடுகள் நடந்துள்ளதாகத் தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. "மின்சார வாரியத்தில் மின்சாரக் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் சரி, நிலக்கரி வாங்குவதாக இருந்தாலும் சரி, அனைத்தும் முற்றிலும் வெளிப்படையான ஆன்லைன் டெண்டர் விதிமுறைகளின்படியே நடைபெறுகின்றன. இதில் தனிநபர் யாரும் தன்னிச்சையாகத் தவறு செய்யவோ அல்லது முறைகேடுகளில் ஈடுபடவோ சாத்தியமே இல்லை. அவ்வாறு இருக்கையில், ஏதோ முறைகேட்டு ஆதாரங்களை அழிக்கத்தான் இந்தத் திருட்டு நடந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று அவர் விளக்கியுள்ளார்.