“என்னை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுறாங்க!” - மற்றுமொரு திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் முக்கியப் புள்ளிகளைத் தமிழக வெற்றிக் கழகம் தன்பக்கம் இழுத்து வரும் வேளையில், தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. "தன்னைத் தவெக-வில் இணையச் சொல்லி மிரட்டும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன" என்று கோவில்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் தவெக சார்பில் அண்மையில் ஒரு முக்கியமான உள்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேடையில் பேசிய தவெக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், திமுக சட்டமன்ற உறுப்பினரைக் குறிவைத்து கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில், "கோவில்பட்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியை அவரது பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து, அவரைத் தமிழக வெற்றிக் கழகத்தில் முறைப்படி சேர்ப்போம்" என்று பாலசுப்பிரமணியன் பேசியதாகத் தெரிகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கோவில்பட்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, தவெக மாவட்டச் செயலாளரின் பேச்சுக் குறித்துத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்:
"தவெக மாவட்டச் செயலாளரின் இந்த உரை, மக்கள் பிரதிநிதியான என்னை மிரட்டும் தொனியில் அமைந்துள்ளது. இதுபோன்ற மிரட்டல் உத்திகளுக்குத் திமுகவினர் யாரும் அஞ்சப் போவதில்லை. சாமானிய மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை, மிரட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டு ₹180 கோடி ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்றொரு திமுக எம்.எல்.ஏ-வான கருணாநிதி தனக்கு விடுக்கப்படும் தவெக-வின் மிரட்டல் குறித்துப் புகார் தெரிவித்து இருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.