"பல கோடி ரூபாய் பேரம் பேசி என்னை அழைத்தார்கள்...” காரைக்குடியில் சீமான் ஆவேசம்!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, கூட்டணி குறித்துத் தனக்கு வந்த பல கோடி ரூபாய் பேரங்களை நிராகரித்துவிட்டுத் தனித்து நிற்பதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
"பல கோடி ரூபாய் பேரம் பேசி என்னை அழைத்தார்கள். ஆனால், நான் அதற்கு மசியவில்லை. மூன்று அல்லது நான்கு சீட்டுகளுக்காகவும், பணத்திற்காகவும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் எவ்வித சமரசமும் இன்றி தனித்துத் தான் நிற்கிறோம்" என சீமான் அதிரடியாகத் தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள இலவச அறிவிப்புகளைச் சீமான் கடுமையாகச் சாடினார்.
"வாக்குக்குப் பணம் கொடுப்பதும், இலவச அறிவிப்புகளை வெளியிடுவதும் மக்களின் வாக்குகளைப் பறிக்க நடக்கும் வஞ்சக சூழ்ச்சி. இதனை மக்கள் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டனர். மாணவர்களுக்குக் கல்வி கொடுப்பது அரசின் கடமை. அது எப்படி கடனாக மாறியது? கடனைத் தள்ளுபடி செய்வதற்குப் பதில், கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியதுதானே?"
"இலவசப் பேருந்து, டிவி, மிக்சி என மக்களைக் கையேந்த வைத்து அவர்களின் தன்மானத்தைப் பறிக்கிறார்கள். கையேந்துவது ஒரு இனத்தின் வீழ்ச்சி. மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். ஆனாலும் மின் வாரியத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் உள்ளது. ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு திட்டமாவது உருப்படியாகச் செய்தார்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உலகத் தரமான கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். குடிநீர் எக்காரணம் கொண்டும் விற்கப்படாது; அனைவருக்கும் இலவசமாகத் தண்ணீர் வழங்கப்படும். அனைவருக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தடையின்றி எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
"சாதி, மதம் நமது அடையாளம் இல்லை; மொழி தான் நமது அடையாளம். இழந்த தமிழ் மொழியின் பெருமையை மீட்கத் தமிழன் ஆட்சி மலர வேண்டும்" என பேசினார்.