"ஜெயலலிதாவை நான்தான் கொன்னுட்டதாகக் கதை கட்டினார்கள்" - சசிகலா ஆவேசப் பேச்சு!
கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற சசிகலா, அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் உருவப்படங்களுடன் கூடிய புதிய கொடியை அறிமுகம் செய்த சசிகலா, "அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாகப் பொறுமை காத்த தான், இனி அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதையும் அவர் உறுதிபடக் கூறினார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குச் சசிகலா உருக்கமான விளக்கம் அளித்தார்: "அம்மாவுடன் நிழல் போல இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்தவள் நான். மருத்துவமனையில் இருந்த 72 நாட்களும் உடனிருந்தேன். அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென அட்டாக் வந்துவிட்டது. ஆனால் நான்தான் அவரை கொன்றுவிட்டதாக வெளியில் இருப்பவர்கள் இல்லாத கதைகளைக் கட்டிவிட்டார்கள்."
தனது அரசியல் எதிரியான எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசுகையில்: "ஜெயலலிதாவின் படத்தின் முன் அனைத்து எம்.எல்.ஏ-க்களிடமும் சத்தியம் வாங்கினேன். அந்த சத்தியத்தின் அடிப்படையில் தான் ஈ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக்கக் கடிதம் கொடுத்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்சியைக் காட்டிலும் தன்னைப் பற்றி மட்டுமே சுயநலமாகச் சிந்தித்தார். அதன் விளைவாகவே இன்று கட்சி சிதறிக் கிடக்கிறது."
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சசிகலாவின் இந்தப் புதிய கட்சி அறிவிப்பு மற்றும் கொடி அறிமுகம், அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.