"என்னை லாரி ஏற்றி கொல்ல முயன்றார்கள்" - ஆதாரத்தை வெளியிட்டு தவெக எம்எல்ஏ சரவணன் பேட்டி!

 

திமுகவில் இணைவதற்காகத் தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களை வெளியிட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன், தம்மைக் காரோடு சேர்த்து லாரி ஏற்றிப் படுகொலை செய்ய முயன்றதாக தற்பொழுது மற்றொரு திடுக்கிடும் புகாரைக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ சரவணன், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தங்களை விலைக்கு வாங்க ஒரு கும்பல் நீண்ட நாட்களாகப் பின் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைவதற்காக ரூ.50 கோடி பணம் தருவதாகப் பேசிய பேரத்திற்குத் தான் எவ்வித உடன்பாடும் தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் நேரடியாகத் தனது எம்எல்ஏ அலுவலகத்திற்கே வந்து தமக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

பணப் பேரத்திற்கு அடிபணியாததால் தன்னைத் தீர்த்துக்கட்ட விபத்து என்ற பெயரில் ஒரு சதித் திட்டம் அரங்கேறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"கடந்த 25 நாட்களுக்கு முன்பாக நான் எப்போதும்வென்றான் பகுதிக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது திட்டமிட்டே ஒரு லாரி எனது காரின் மீது மோதி என்னைக் கொலை செய்ய முயன்றது. அந்தப் பயங்கரமான விபத்தில் இருந்து நான் அதிர்ஷ்டவசமாக மட்டுமே உயிர் தப்பினேன். அது சாதாரண விபத்து அல்ல, என்னை ஒழித்துக் கட்ட நடந்த சதி என்பது இப்போதுதான் புரிகிறது."

குதிரைப்பேரப் புகாரைத் தொடர்ந்து, தற்பொழுது லாரி ஏற்றிப் படுகொலை செய்ய முயன்றதாக எம்எல்ஏ சரவணன் கூறியுள்ள இந்த பகீர் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.