"அவங்க மனுஷங்களே இல்ல...” - சாத்தான்குளம் தீர்ப்புக்குப் பின் பென்னிக்ஸ் சகோதரி நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் மல்க பேட்டி!

 

சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள தீர்ப்பு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. குறிப்பாக, நீதிமன்ற வளாகத்தில் பென்னிக்ஸின் சகோதரி கண்ணீருடன் பேட்டியளித்தது அந்தத் துயரத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதுமே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிபதி முத்துக்குமரன் இந்தத் தீர்ப்பை வாசித்த பிறகு, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராஜின் மகள் (பென்னிக்ஸின் சகோதரி), தனது குமுறல்களை வெளிப்படுத்தினார். "என் தந்தை, தம்பியின் அன்பை இழந்து தவிக்கிறோம். 31 வயதான என் தம்பி தன் வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே, அதிகாரத் திமிரால் அடித்துக் கொல்லப்பட்டான். அன்று இரவு 7.50 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை என் அப்பாவையும், தம்பியையும் மாறி மாறி அடித்துள்ளனர். அப்பா முன்பே தம்பியையும், தம்பி முன்பே அப்பாவையும் தாக்கியுள்ளனர். இதையெல்லாம் பார்த்து அந்த ஆய்வாளர் ரசித்துள்ளார். இவர்கள் மனிதர்களே கிடையாது.. மிருகங்கள்" என்று ஆவேசமாகக் கூறினார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி சாத்தான்குளம் போலீசார் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ  தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் முன்னரே உயிரிழந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வரும் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. "எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது, ஆனால் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜெபசிங் பேசுகையில், "பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணையின் தீவிரத்தால் உண்மை வென்றுள்ளது. அனைவரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.