திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்...  பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு!

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடலில் நீராடிச் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை திருச்செந்தூர் கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் கடல் உள்வாங்கிய பகுதிகளில் எப்போதும் தண்ணீருக்கு அடியில் இருக்கும் பாசி படிந்த அபூர்வ பாறைகள் வெளியே தெரிந்ததால் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் பெரும் ஆச்சரியமும் பரபரப்பும் அடைந்தனர்.

பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் நீர் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று காலை திடீரென கடல் நீர் பின்னோக்கிச் சென்றது பக்தர்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. கடல் உள்வாங்கியுள்ள பகுதிகளில் பாறைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், கடலில் நீராடும் பக்தர்கள் மிகவும் கவனமுடனும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு முன்னும் பின்னும் சில தினங்களில் காலையில் கடல் நீர் உள்வாங்குவதும், மாலையில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் இங்கு இயற்கையாக நடக்கும் நிகழ்வுதான் எனப் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், 70 அடி வரை கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாலையில் கடல் நீர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.