திருக்கார்த்திகை மகாதீபம்... பக்தர்களின் வசதிக்காக உதவி எண்கள் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரத்யேக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் திருவிழா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு இந்த உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் திருவிழா நேரங்கள், தரிசன ஏற்பாடுகள், போக்குவரத்து வழித்தடங்கள், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள 04175-233344, 04175-233345, 8072797683 ஆகிய தொலைபேசி மற்றும் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கார்த்திகை மகா தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டுத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
புதியதாக திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் எவ்விதக் குழப்பமும் இன்றிப் பாதுகாப்பாகத் தரிசனம் மற்றும் கிரிவலம் மேற்கொள்ள ஏதுவாக, இந்த உதவி மையங்கள் மூலம் உடனுக்குடன் உரிய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவையொட்டி நகரம் முழுவதும் குடிநீர், கழிப்பறை, மருத்துவ முகாம்கள், சிறப்புப் பேருந்து வசதிகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றி, தேவைப்படும் நேரங்களில் இந்த உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.