அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்... திருமாவளவனை நேரில் சந்திக்கும்  விஜய்?  

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தவெக கைவசம் தற்போது 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்ட இன்னும் ஒரு எம்.எல்.ஏ-வின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் விசிக-வின் ஆதரவைப் பெறுவதன் மூலம் தடையின்றி ஆட்சி அமைக்க முடியும் என விஜய் தரப்பு நம்புகிறது. இருப்பினும், விசிக தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

திருமாவளவனுடனான இந்தச் சந்திப்பின் போது, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதா அல்லது அமைச்சரவையில் பங்கேற்பதா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம். ஒருபுறம் போலி கடிதப் புகார்கள் மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அழைப்பிற்காகக் காத்திருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு தவெக-வின் ஆட்சி கனவை நனவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.