"சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திருமாவளவன்" - நாதக செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜன்!
தமிழக அரசியல் களம் புதிய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் டெல்லி பயணங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான அரசியல் விமர்சனங்களும் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் உச்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகளைச் சாடிப் பல்வேறு உதாரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியராஜன் தனது பதிவில், "இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம் தான்" என்று ஒரு காலகட்டத்தில் பேசிவிட்டு, பின்னர் அப்படியே 'யூ-டர்ன்' அடித்து "தமிழ்த்தேசியம் என்று ஒன்றுமே இல்லை" எனத் தனது கொள்கையை மாற்றிக் கொள்பவர் திருமாவளவன்.
முன்னாள் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்தபோது, "விஜயகாந்திற்கு அம்பேத்கர் பற்றி என்ன தெரியும்?" என்று மேடைகளில் பேசியவர், சில வருடங்கள் கழித்துத் தனது அரசியல் லாபத்திற்காக "வாழும் அம்பேத்கராக விஜயகாந்த் தெரிகிறார்" என்று பேசினார்.
இப்படித் தனது அரசியல் சுயநலத்திற்காகச் சூழ்நிலைக்கு ஏற்பக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் ஓராயிரம் சந்தர்ப்பவாத அரசியல் வரலாற்றுப் பின்னணிகள் திருமாவளவனுக்கு உண்டு என்று பாக்கியராஜன் தனது எக்ஸ் பதிவில் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். தவெக அமைச்சரவையில் விசிக இணைவது குறித்த அரசியல் நகர்வுகள் பரவலாகப் பேசப்பட்டு வரும் வேளையில், நாதக செய்தித் தொடர்பாளரின் இந்த நேரடி விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.