மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் திடீர் சந்திப்பு... திமுக-வின் அடுத்த கட்ட நகர்வு என்ன?!

 

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் எட்டாத நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

திமுக-வின் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடந்து வந்த நிலையில், திருமாவளவன் (விசிக தலைவர்), வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்), பெ.சண்முகம் (சிபிஎம் மாநிலச் செயலாளர்) ஆகியோர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளனர். 

விஜய்க்கு ஆதரவாக இன்று காலையிலேயே திருமாவளவன் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மு.க.ஸ்டாலினுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதிப்படுத்தவே இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், திமுக கூட்டணியின் ஒற்றுமையை நிரூபிக்க ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். ஆளுநர் தவெக-விற்கு 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் கோரியுள்ள நிலையில், திமுக தனது அடுத்தகட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ள தலைவர்கள், தங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. திமுக-வின் இந்தத் திடீர் ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.