"பாசறைப் பாணர்" தேனிசை செல்லப்பா காலமானார்: தமிழ்த் தேசியத்திற்கு பேரிழப்பு  - திருமாவளவன் புகழஞ்சலி!

 

தமிழ்த்தேசியப் பாடகர் தேனிசை செல்லப்பா (70) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ்த் தேசியக் களத்திற்குப் பேரிழப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். எழுச்சிமிக்கத் தனது குரலால் உலகத் தமிழர்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டிய தேனிசை செல்லப்பாவின் மறைவு, தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பா, கலைகளின் வழியாக அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ஆரம்பத்தில் திராவிடர் கழகம் மற்றும் சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் பாடி வந்த இவர், பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.

அவரது பாடல்கள் எளிய மக்களையும் எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் அமைந்திருந்தன. ஈழப் போராட்டக் களத்தில் இவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இவருக்கு 'பாசறைப் பாணர்' என்னும் உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும் அதன் தலைவர் திருமாவளவன் மீதும் கொண்ட பற்றுதலால், அக்கட்சிக்காகப் பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் மேடைகளைத் தவிர்த்து வந்த அவர், இறுதியாக 2024-ம் ஆண்டு விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற 'மாவீரர் நாள்' நிகழ்வில் பங்கேற்றுப் பாடினார்.

அதுவே அவரது இறுதி மேடை நிகழ்வாக அமைந்தது. தேனிசை செல்லப்பாவின் உடல் இன்று (ஏப்ரல் 29) காலை சென்னை அருகே உள்ள படப்பையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் விசிக தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று வீரவணக்கம் செலுத்துமாறு திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.