தேர்தலில் போட்டியிடவில்லை - திடீரென பின்வாங்கிய திருமாவளவன்... காட்டுமன்னார்கோவில் தொகுதியில் புதிய வேட்பாளர்?!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக விசிக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், திருமாவளவன் ஒரு தொகுதியில் மட்டும் முடங்கிவிடாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் தீவிரப் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிகிறது.

தமிழகம் தழுவிய அளவில் விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை உறுதி செய்யத் தலைவரின் நேரடிப் பரப்புரை அவசியம் என்பதால், அவர் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டுப் பிரசாரத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்று மனுத் தாக்கல் செய்யவில்லை என்பது இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

திருமாவளவனுக்குப் பதிலாகக் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக-வின் மாநில அமைப்புச் செயலாளர் இளமாறன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் போட்டியிடுவார் என்று உற்சாகத்தில் இருந்த விசிக தொண்டர்களுக்கு இந்தத் தகவல் சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழகம் முழுவதும் அவர் மேற்கொள்ளப் போகும் அனல் பறக்கும் பிரசாரம் கூடுதல் பலம் சேர்க்கும் எனப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.