திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்... 300 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி நேற்று தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது காவல்துறையினர் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் நேற்று மாலை உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மலை உச்சியிலுள்ள தூணிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாகக் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதி 'ரெட் ஜோன்' ஆக அறிவிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் தடையையும் மீறிப் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகப் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட 300 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தடையை மீறி அனுமதியின்றி ஒன்றுகூடுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.