திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா - நாளை கொடியேற்றம் - 15 நாட்கள் நிகழ்வுகளின் முழு விபரம்!

 

மதுரை மாவட்டம் அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மிகவும் விசேஷமான பங்குனிப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில், பங்குனித் திருவிழா நாளை தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பதினைந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.

தேதி முக்கிய நிகழ்வு
மார்ச் 23   கொடியேற்றம் (திருவிழா தொடக்கம்)
மார்ச் 28 கைப்பாரம் நிகழ்ச்சி (வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி உலா)
ஏப்ரல் 01 பங்குனி உத்திரம் (காவடி நேர்த்திக்கடன்)
ஏப்ரல் 02 சூரசம்ஹாரம்
ஏப்ரல் 03 முருகப்பெருமான் பட்டாபிஷேகம் (தங்க கிரீடம் & செங்கோல்)
ஏப்ரல் 04 திருக்கல்யாணம் (மீனாட்சி - சுந்தரேசுவரர் வருகை)
ஏப்ரல் 05 தேரோட்டம் (திருவிழாவின் சிகர நிகழ்ச்சி)
ஏப்ரல் 06 தீர்த்த உற்சவம் (திருவிழா நிறைவு)

விழாவின் சிறப்பம்சங்கள்:

கோவிலிலேயே அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் முருகப்பெருமானைச் சீர்பாதங்கள் மற்றும் பக்தர்கள் கைகளிலேயே சுமந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று பக்தர்களுக்குச் சிறப்புப் பிரசாதமாகச் சந்தனம் வழங்கப்படும்.

இந்த விழாவிற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் திருப்பரங்குன்றம் எழுந்தருளுவது தனிச்சிறப்பாகும். ஏப்ரல் 4ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.  பங்குனி உத்திரத் திருவிழாவின் உச்ச நிகழ்வாகப் பிரம்மாண்டத் தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி  நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுப்பார்கள்.