திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் திருமலையில் பெரும் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 70 ஆயிரத்து 216 பக்தர்கள் ஸ்ரீ வெங்கடாசலபதியை நேரில் தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 27 ஆயிரத்து 606 பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகத் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைத் தொகை மட்டும் ஒரே நாளில் ரூ.4 கோடியே 77 லட்சம் எட்டியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாகச் சிலாத்தோரணம் பகுதி வரை நீண்ட காத்திருப்பு வரிசை நீண்டு கொண்டு செல்கிறது. குறிப்பிட்ட நேர ஒதுக்கீட்டு டோக்கன்கள் (எஸ்.எஸ்.டி) இல்லாத நேரடி இலவச சர்வதரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரே நாளில் 4 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதுடன், 2 லட்சத்து ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுப் பயனடைந்துள்ளனர். மேலும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களில் 3 ஆயிரத்து 673 பேருக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் தேவஸ்தான நிர்வாகம் வழங்கியுள்ளது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறைக் காலம் என்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்யத் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து கண்காணித்து வருகின்றனர்.