திருப்பதியில் ஒரே  டிக்கெட்டில் 2 முறை சாமி தரிசனம்... ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கோங்க! 

 

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் 16ஆம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த ஒரு டிக்கெட்டின் விலை ரூ.700 ஆகும் மற்றும் அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு திருமலையில் உள்ள சுபதம் நுழைவு வாயில் வழியாக கோயில் வளாகத்திற்கு செல்லலாம்.

கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக சேவையில் இவர்கள் பங்கேற்பதுடன் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு, அதே நாளில் இரண்டாவது முறையாக மதியம் 12:30 மணிக்கு அதே டிக்கெட் மூலம் பக்தர்கள் சுபதம் வாயில் வழியாக மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் புஷ்ப யாகம் உற்சவத்தில் பங்கேற்கலாம். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீண்டும் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன், இதன் மூலம் ஒரே நாளில் இருமுறை சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் விஐபி தரிசனம் உள்ளிட்ட சேவைகள் மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே மாதத்தில் பலமுறை சிபாரிசு கடிதங்கள் மூலம் சுவாமி தரிசனம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சிபாரிசு கடிதத்தின் மூலம் சுவாமி தரிசனம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.