undefined

தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 26!

 

மார்கழி 26... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 26!

பகைவர்களை நடுங்க வைத்த பாஞ்சஜன்யம்....

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்:

 

பக்தர்களிடம் அளவில்லா அன்பு கொண்டவன் கண்ணன். நீலக்கல் நிறத்தில் மின்னும் அவன், பாற்கடலில் ஆலிலையில் மிதப்பவன். அவனை நினைத்தாலே மனம் அமைதியாகிறது. அந்தக் கருணை கொண்ட இறைவனை நோக்கி பக்தர்கள் நோன்பை தொடங்குகிறார்கள்.

மார்கழி நோன்பு என்பது வழிவழியாக பெரியவர்கள் கடைபிடித்து வரும் புனித வழக்கம். அந்த நோன்பு உலகமே கேட்கும் ஒலியுடன் நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம். பாஞ்சஜன்யம் போன்ற வலம்புரி சங்குகள் முழங்க வேண்டும். பெரிய முரசுகள் ஒலிக்க வேண்டும். பல்லாண்டு பாடல்கள் எங்கும் கேட்க வேண்டும்.

மங்கல தீபங்கள் ஒளிர வேண்டும். கொடிகள் காற்றில் அசைய வேண்டும். இந்த நோன்பை நிறைவேற்ற தேவையான இடமும் வசதியும் இறைவன் அருள வேண்டும். அந்த அருள் கிடைத்தால், மார்கழி நோன்பு முழுமை பெறும் என்ற நம்பிக்கையிலேயே பக்தர்கள் கண்ணனை வேண்டுகிறார்கள்.

திருமால் கையில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் சாதாரண சங்கு அல்ல. அதன் பின்னால் ஒரு வீரக் கதை உள்ளது. பஞ்சசன் என்ற அசுரன், சாந்தீபனி முனிவரின் மகனை கொன்று கடலில் மறைந்தான். அந்த முனிவரிடம் கிருஷ்ணர் கல்வி பயின்று வந்தார்.

படிப்பு முடிந்தபோது, குருதட்சணையாக தனது மகனைக் கொன்ற அசுரனைத் தண்டிக்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் கேட்டார். உடனே கிருஷ்ணர் கடலுக்குள் சென்று பஞ்சசனை வீழ்த்தினார். அவனைச் சங்காக மாற்றி, தன் கையில் ஏந்தினார். அதுவே பாஞ்சஜன்ய சங்கமாக மாறியது.

அசுரனின் வலிமை கொண்ட அந்த சங்கு, போர்க்களத்தில் பெரும் ஒலியுடன் முழங்கியது. குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணர் அதை ஊதியபோது, அதன் பேரொலி கேட்டு எதிரிப் படைகள் நடுங்கின. அதனால் தான் பாஞ்சஜன்யம் வெறும் சங்கமல்ல, பகைவர்களை அஞ்ச வைத்த வீரச் சின்னமாக போற்றப்படுகிறது.