5 மாதங்களுக்கு பிறகு நூல் விலை குறைப்பு... உற்பத்தியாளர்கள் உற்சாகம்!
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான திருப்பூரில் பருத்தி மற்றும் நூல் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அங்குள்ள பின்னலாடைத் தொழிலை நேரடியாகப் பாதிக்கும் காரணியாக விளங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு ஜூன் மாதத் தொடக்கத்தில் திருப்பூரில் உள்ள நூல் ஆலைகள் தங்களின் புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த புதிய அறிவிப்பின்படி அனைத்து ரக நூல் விலைகளும் கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகப் பருத்தியின் விலை உயர்வு காரணமாக நூல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், புதிய ஆடை உற்பத்தி ஆர்டர்களைப் பெறுவதில் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வந்தன. தற்பொழுது பருத்திக்கான இறக்குமதி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்தான் இந்த நூல் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நூல் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் பின்னலாடைகளின் உற்பத்திச் செலவு குறைந்து, சந்தையில் புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெற இது ஏதுவாக இருக்கும் என்று ஆடை உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.
நூல் விலை குறைந்துள்ள இந்தச் சூழலால் திருப்பூரில் தொய்வடைந்து காணப்பட்ட ஆடை உற்பத்திப் பணிகள் மீண்டும் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன. வரும் காலங்களில் நூல் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன