தாயை வீல்சேருடன் ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த மகன்... பரபரப்பு வாக்குமூலம்! 

 

 

திருவள்ளூர் மாவட்டம் மணவூர் அருகே தண்டவாளத்தில் மூதாட்டி அடிபட்டு இறந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காபுல் கண்டிகையைச் சேர்ந்த பத்மாவதி (75) என்பவருக்குக் கிடைக்கும் குடும்ப ஓய்வூதியப் பணத்தை வைத்துக்கொண்டு, அவரது இளைய மகன் பார்த்தசாரதி (43) கவனிப்பில் வசித்து வந்துள்ளார். முதுமையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த தாயை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணவூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மூதாட்டி அடிபட்டு இறந்து கிடப்பதாகத் தகவல் வெளியானது. அங்கு வீல் சேர் நொறுங்கி கிடந்ததால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நடைமேடையில் தாயை வீல் சேரில் அமரவைத்து அழைத்துச் சென்று, சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் அதிவிரைவு ரயில் முன் வீல் சேருடன் தள்ளி மகனே கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே போலீசார் பார்த்தசாரதியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். தாயைப் பார்த்துக் கொள்ள முடியாததால் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்றதாக அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். பெற்ற தாயை மகனே கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.