பெற்றோர் சதியை முறியடித்து திருநங்கையை கரம்பிடித்த கணினி ஊழியர்!

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை பகுதியில் வசித்து வருபவர்  30 வயதான பிரவீன்ராஜ். இவர்  சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 28 வயதான திருநங்கை கயல்விழி என்பவருடன் இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் நண்பர்களாகப் பழகிய இவர்கள் இருவருக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்து தீவிரமாகக் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலைப் பற்றி அறிந்த பிரவீன்ராஜின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.காதலர்களைப் பிரிப்பதற்காக பிரவீன்ராஜை அவரது பெற்றோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கட்டாயப்படுத்திச் சேர்த்து வைத்திருந்தனர். அதன்பின்னர் கடந்த மே மாதம் அவரை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய தீவிர ஏற்பாடுகளைச் செய்தனர். இந்தத் தகவலை அறிந்த பிரவீன்ராஜ் உடனடியாகத் தனது காதலி கயல்விழிக்குத் தகவல் தெரிவித்து இருவரும் இணைந்து வாழ முடிவு செய்தனர்.

பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகத் தங்களின் காதலைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.இதனைத் தொடர்ந்து இருவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனித சட்ட உதவி மையத்தை நேரில் அணுகினர். அங்கிருந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நேற்று இருவரும் மாலை மாற்றித் தாலி கட்டி சுயமரியாதை பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினரின் பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி திருநங்கையைக் கரம்பிடித்த கணினி ஊழியரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.