சுடுகாட்டில் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை... பெரும் பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுடுகாட்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவரான ரஞ்சன் என்பவர் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, கல்லறை மீது ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 13) இரவு நண்பர்கள் சிலர் அவரை வெளியில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், கோஷ்டி மோதல் காரணமாக இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று ரஞ்சனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரை வெளியில் அழைத்துச் சென்ற நண்பர்கள் யார் என்பது குறித்தும், இந்த கொடூரக் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி ஏற்படும் முன்விரோதம் மற்றும் கோஷ்டி மோதல்களே இதுபோன்ற விபரீத முடிவுகளுக்குக் காரணமாக அமைவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொலை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் கல்வி நிலையங்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.