குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா... முதல்வர் பங்கேற்பு - 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை!
முதலமைச்சரின் வருகையையொட்டிப் பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்யும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக, ரூ. 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு வளைவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
புத்தளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'மு.க.ஸ்டாலின் படைப்பகம்' மற்றும் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் குமரி கோமேதகம் ஆர். பொன்னப்பா நாடர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். நாகர்கோவில் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் பங்கேற்று, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகின்றனர்.